Wednesday, February 27, 2013

கிராஃபிக்ஸ் "போராளிகள்" பரப்பும் வன்மம்


நம் தமிழ்த் தேசியப் "போராளிகள்" கிராபிக்ஸ் கலையில் வல்லவர்கள் என்பது தெரியும். முடிந்தால் கிராபிக்ஸ் முறையிலேயே தனி ஈழம் பெற்றுத் தரும் அளவுக்கு அவர்களுக்குள் லட்சிய "வெறி" இருக்கிறது என்பதும் நாம் அறிந்ததே.

இன்று முகநூலில் அவர்களது கிராஃபிக்ஸ் ஒன்றைப் பார்த்தேன். அதில், ராஜபக்சே, பிரணாப் முகர்ஜி, மன்மோகன்சிங், சோனியா, கருணாநிதி ஆகியோர் தூக்குக் கயிற்றின் முன் நிற்கிறார்கள். அவர்களுக்கு மேலே உள்ள வாசகம் "ஐநா மன்றத்தையும், இந்திய வழக்காடு மன்றத்தையும்" அறைகூவி அழைத்து "குற்றவாளிகளைத் தண்டிப்பது எமக்கான தீர்வு அல்ல" என்று சொல்கிறது. கீழே உள்ள வாசகம் 120 கோடி இந்தியர்களை, புத்தர்-காந்தி தேசத்தை தலை குனிய வைத்தவர்களை தூக்கில் போடு என்று கோருகிறது. இதில்தான் இந்தியாவை நட்பாக்கிக்கொள்ளும் அவர்களின் ராஜதந்திரத்தை (!) நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்த் தேசியர்கள் தேர்ந்த ராஜதந்திரிகளும்கூட என்பது சொல்லியா தெரியவேண்டும்!

இவர்கள்தானே "மரண தண்டனையே கூடாது என்று தலைக்குப் பின்னே ஒளிவட்டத்தோடு வந்து பேசியவர்கள்" என்றெல்லாம் அதிர்ச்சியாகக் கூடாது. இன்னும் இருக்கிறது. இந்த அற்புதமான படத்துக்கு நீ...ண்ட குறிப்பும் உள்ளது. அதில் "21-ம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையை" புரிந்தவர்களை இவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள். முதலில் வருகிறவர் கருணாநிதி. அவரது குடும்பத்தின் கடைசி சிசுவும்கூட தமிழ் இனத்துக்கு நஞ்சு என்கிறது அந்தக் குறிப்பு. பிறகு, படத்தில் தூக்குக் கயிற்றின் முன் நிற்கிற அனைவரைப் பற்றியும் வரிசையாகக் குறிப்பு. கடைசியில் வருகிறவர் ராஜபக்சே. இவர் சிங்கள மக்களுக்கு நேர்மையான அரசியல் தலைவர் என்ற "தகவலோடு" தொடங்குகிறது அவர் பற்றிய குறிப்பு. அரசியல் ஞானத்தில் இவர்களை மிஞ்ச யாரும் இல்லை என்பதைத் தனியாக நான் குறிப்பிடத் தேவையில்லை!

கடைசியாக அவர்களின் சட்ட அறிவும், வரலாற்று அறிவும் வெளிப்படுகிறது. ராஜபக்சேகூட பரவாயில்லை எப்படியாவது மீதி நாலு பேருக்கும் தூக்குத் தண்டனை கொடுத்துவிடு என்று "இந்திய வழக்காடு மன்றத்தை" கேட்கிறார்கள்.

//5000 ஆண்டுகால இந்திய நாட்டின் பாரம்பரிய பெருமையை, உலகின் மூத்த குடிகளான தமிழர்களை குழி தோண்டி புதைத்த இந்த நயவஞ்சகர்களை தண்டிக்க வேண்டும். இவர்களை தண்டிப்பதன் மூலம் இந்தியா புத்தர் பிறந்த காந்தி பிறந்த தேசம் என்றுமே அற நெறி தவறாது என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்// என்று கூறி முடிக்கிறார்கள். நீங்கள் படித்தது ஆர்.எஸ்.எஸ். பிரசுரமா என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால் உங்களையும் தூக்கில் ஏற்றிவிடுவார்கள். ஜாக்கிரதை.

சரி ஏன் இந்த மறை கழன்றவர்களைப் பற்றி மூச்சுப் பிடித்துக்கொண்டு விமர்சிக்கிறீர்கள் என்று கேட்பீர்களென்றால் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான பதிலைச் சொல்கிறேன். இந்தப் பதிவு நான் பார்த்தவரையில் முகநூலில் 1,358 பேரால் ஷேர் செய்யப்பட்டிருந்தது.

2 comments:

தமிழானவன் said...

எந்தப் படம் என்று போட்டிருந்திருக்கலாம்.

oodukathir said...

தமிழானவன், அந்தப் படத்தை நாமும் பிரசுரம் செய்யவேண்டுமா என்று தயங்கினேன். ஆனால், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள ஏதுவாக அந்தப் படத்தை தற்போது பதிவில் இணைத்துள்ளேன்.
தவிர, முகநூலில் அந்தப் பதிவின் இணைப்பையும் தருகிறேன். முக நூல் கணக்கு உள்ளவர்கள் திறந்து பார்க்கலாம். படித்து "ரசிக்கலாம்".
http://www.facebook.com/photo.php?fbid=492799764100841&set=a.324626570918162.75396.323756811005138&type=1&theater

Post a Comment