Monday, February 25, 2013

டெசோ என்றால் எதிர்ப்பு; ஜெயா என்றால் ஆதரவு


கருணாநிதி: தனி ஈழம் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டவர். புலிகளையும், ஈழத்தையும் ஆதரித்ததால், அமைதிப்படையை எதிர்த்ததால், 1991-ல் இவர் தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது. 2009-ல் போர் நடந்த நேரத்தில் உறுதியான அரசியல் நிலை எடுக்கத் தவறியதுதான் இவர் மீதான குற்றச்சாட்டு.

ஜெயலலிதா: 2009 போர் நடந்த நேரத்தில் ஈழத் தமிழர் என்ற சொல்லே தவறு என்றும், இலங்கைத் தமிழர் என்றுதான் சொல்லவேண்டும் என்றும் குரல் எழுப்பியவர். போர் நடந்தால் சாவது சகஜம் என்றவர். விடுதலைப் புலிகளின் ஜென்ம வைரி. பிரபாகரனைக் கைது செய்யவேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானம் போட்டவர்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் இருவரும் தற்போது இருவேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

கருணாநிதி, "டெசோ" என்ற ஈழ ஆதரவாளர் அமைப்பை  ஏற்படுத்தி, ஈழ விடுதலை என்பதை கொள்கையாக அறிவித்து, அதற்கு ஆதரவாக இந்தியா முழுவதும் அரசியல் ஆதரவைத் திரட்டுகிறார். ஒரு இந்திய அரசியல் அமைப்பு என்ற முறையில் அதிகாரபூர்வமாக தமது நிலையை ஐ.நா.வில் தெரிவித்துள்ளார். தொடர் நடவடிக்கைகள், போராட்டத் திட்டங்கள் உண்டு.

ஜெயலலிதா இப்போதும்கூட, ஈழ விடுதலையை ஏற்பதாக பெயரளவில்கூட சொல்லவில்லை. உணர்ச்சி ஏற்றும், உசுப்பேற்றும் நடவடிக்கைகள் மூலம் மேம்போக்காக தாம், ஈழப் போராட்டத்துக்கு ஆதரவானவர் என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கிறார். உறுதியான அரசியல் திரட்டலோ, நடவடிக்கையோ ஏதுமில்லை. உலக அளவில் அரசியல் மக்களைப் பிரிக்கும்போதுகூட விளையாட்டும், பண்பாட்டுத் தொடர்புகளும் இணைக்கும் என்பார்கள். ஆனால், இலங்கை வீரர்கள் தமிழ்நாட்டில் வந்து விளையாடுவார்கள் என்பதால், ஆசிய விளையாட்டுப் போட்டியே தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது என்று முடிவெடுத்து, அதை வெளியே விரட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இவரது ஒரே "ஈழ ஆதரவு நடவடிக்கை" இதுதான்.

ஆனால், இன்று தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்கள் என்றும், தமிழத் தேசியர்கள் என்றும் அறியப்படுகிறவர்கள் கருணாநிதியின் "டெசோ" என்ற சொல்லைக் கேட்டாலே அறுத்துவிட்ட கோழியைப் போல குதிக்கிறார்கள். மொத்த இனப்படுகொலையையுமே செய்தவர் கருணாநிதிதான் என்று வசைபாடுகிறார்கள். கொதிக்கிறார்கள். ஆனால், இந்திய அளவில், எல்லா குறைபாடுகளுக்கும் மத்தியில் ஈழத்தை ஆதரிக்கும் ஒரே பெரிய அரசியல் கட்சி திமுக-தான் என்பதை மறைக்கிறார்கள்.

 பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விதம் வெளியாகியுள்ள நிலையில், இலங்கையோடு நட்பு பாராட்டும் மத்திய அரசின் செயலை கண்டித்தார் கருணாநிதி. அடுத்து டெசோ அமைப்பு மூலம் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு  வெளியிட்டார். இந்த இரண்டுக்காகவும், "தமிழத் தேசியர்களிடம்" இணையத்தில் கருணாநிதி வாங்கிய வசைச் சொற்கள் கொஞ்சமல்ல.

ஆனால், இதே வாரத்தில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் தடைவிதித்த ஜெயலலிதாவின் கடந்த காலத்தை வைத்து இந்த தமிழத் தேசியப் "போராளிகள்" விமர்சிக்க மறந்தது மட்டுமல்ல. தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இதுதான் இன்றைய தமிழத் தேசியர்களின் உண்மை முகம். தமிழ்த் தேசியம் என்னும் புலித்தோலுக்குள் ஒளிந்திருப்பது இந்து தேசியம் என்னும் பசு. எச்சரிக்கை தமிழர்களே.

3 comments:

Unknown said...

"கருணாநிதி, "டெசோ" என்ற ஈழ ஆதரவாளர் அமைப்பை ஏற்படுத்தி, ஈழ விடுதலை என்பதை கொள்கையாக அறிவித்து... "

ஒரு சின்ன சந்தேகம். YMCA "டெசோ" மாநாட்டில் சிதம்பரத்தின் கட்டளைக்கு இணங்க தனி "ஈழம்" என்ற வார்த்தை எந்த தீர்மானத்திலும் வராமல் பார்த்ததோடு அல்லாமல் ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்று கருணாநிதி பேசியதை மறந்து விட்டீங்களா?

oodukathir said...

சிதம்பரத்தின் அழுத்தத்துக்குப் பணிந்து மாநாட்டுத் தீர்மானத்தை அவர்கள் கைவிட்டது உண்மைதான். அந்த வழுக்கல் விமர்சிக்கத் தகுந்ததே. ஆனால், தனி ஈழம்தான் தீர்வு என்ற கருத்தை அவர்கள் கைவிட்டதாகப் பொருளில்லை. தவிர, நிஷா குறிப்பிடுவதைப் போல அவர்கள் ஈழம் என்ற வார்த்தையே வராமல் பார்த்துக்கொண்டார்கள் என்பதும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று சொன்னார்கள் என்பதும் கடைந்தெடுத்த பொய்.
இதோ மாநாட்டுத் தீர்மானங்களுக்கான இணைப்பு:

http://teso.org.in/wp-content/uploads/2012/08/TESO_Resolutions.pdf.


சரி, அப்படி கருத்தளவில் அவர்கள் வைத்திருக்கிற தமிழீழ ஆதரவுக் கருத்தால் என்ன நன்மை என்று கேட்கலாம். எதிராகப் போகாமல் இருப்பதே நன்மைதான். ஏனெனில், இந்தியாவில் ஈழத்துக்கு ஆதரவாக கொள்கை உடைய கட்சிகள் வெறும் நான்குதான். திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, பாமக. இவற்றில் திமுக தவிர்த்த மூன்று கட்சிகளும் சிறு கட்சிகள் அல்லது விளிம்பு நிலைக் கட்சிகள் என்று சொல்லத் தக்கவையே. திமுக-வே முற்றிலும் சரி என்று சொல்லவில்லை. ஆனால், திமுக போன்ற கட்சி அளிக்கும் சிறிய அளவிலான ஆதரவையும்கூட நேர்மறையாக அணுகவேண்டியது அவசியம் என்கிறோம். அவ்வளவே. தவிர, திமுக அரசியல் லாபத்துக்காக ஈழ ஆதரவு முழக்கத்தை எடுத்திருப்பதாக சொல்வது முற்றிலும் உண்மைக்கு மாறானது. ஈழ ஆதரவு மூலம் இதுவரை எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வந்ததில்லை. 2009-போருக்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் திமுக பெரும்பான்மை எம்.பி.க்களை பெற்றது.

வேகநரி said...

//இதுதான் இன்றைய தமிழத் தேசியர்களின் உண்மை முகம். தமிழ்த் தேசியம் என்னும் புலித்தோலுக்குள் ஒளிந்திருப்பது இந்து தேசியம் என்னும் பசு. எச்சரிக்கை//
தமிழ் தேசியர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
இலங்கை தமிழர்களும் இந்துக்களே.

Post a Comment