Wednesday, February 27, 2013

கிராஃபிக்ஸ் "போராளிகள்" பரப்பும் வன்மம்


நம் தமிழ்த் தேசியப் "போராளிகள்" கிராபிக்ஸ் கலையில் வல்லவர்கள் என்பது தெரியும். முடிந்தால் கிராபிக்ஸ் முறையிலேயே தனி ஈழம் பெற்றுத் தரும் அளவுக்கு அவர்களுக்குள் லட்சிய "வெறி" இருக்கிறது என்பதும் நாம் அறிந்ததே.

இன்று முகநூலில் அவர்களது கிராஃபிக்ஸ் ஒன்றைப் பார்த்தேன். அதில், ராஜபக்சே, பிரணாப் முகர்ஜி, மன்மோகன்சிங், சோனியா, கருணாநிதி ஆகியோர் தூக்குக் கயிற்றின் முன் நிற்கிறார்கள். அவர்களுக்கு மேலே உள்ள வாசகம் "ஐநா மன்றத்தையும், இந்திய வழக்காடு மன்றத்தையும்" அறைகூவி அழைத்து "குற்றவாளிகளைத் தண்டிப்பது எமக்கான தீர்வு அல்ல" என்று சொல்கிறது. கீழே உள்ள வாசகம் 120 கோடி இந்தியர்களை, புத்தர்-காந்தி தேசத்தை தலை குனிய வைத்தவர்களை தூக்கில் போடு என்று கோருகிறது. இதில்தான் இந்தியாவை நட்பாக்கிக்கொள்ளும் அவர்களின் ராஜதந்திரத்தை (!) நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்த் தேசியர்கள் தேர்ந்த ராஜதந்திரிகளும்கூட என்பது சொல்லியா தெரியவேண்டும்!

இவர்கள்தானே "மரண தண்டனையே கூடாது என்று தலைக்குப் பின்னே ஒளிவட்டத்தோடு வந்து பேசியவர்கள்" என்றெல்லாம் அதிர்ச்சியாகக் கூடாது. இன்னும் இருக்கிறது. இந்த அற்புதமான படத்துக்கு நீ...ண்ட குறிப்பும் உள்ளது. அதில் "21-ம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையை" புரிந்தவர்களை இவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள். முதலில் வருகிறவர் கருணாநிதி. அவரது குடும்பத்தின் கடைசி சிசுவும்கூட தமிழ் இனத்துக்கு நஞ்சு என்கிறது அந்தக் குறிப்பு. பிறகு, படத்தில் தூக்குக் கயிற்றின் முன் நிற்கிற அனைவரைப் பற்றியும் வரிசையாகக் குறிப்பு. கடைசியில் வருகிறவர் ராஜபக்சே. இவர் சிங்கள மக்களுக்கு நேர்மையான அரசியல் தலைவர் என்ற "தகவலோடு" தொடங்குகிறது அவர் பற்றிய குறிப்பு. அரசியல் ஞானத்தில் இவர்களை மிஞ்ச யாரும் இல்லை என்பதைத் தனியாக நான் குறிப்பிடத் தேவையில்லை!

கடைசியாக அவர்களின் சட்ட அறிவும், வரலாற்று அறிவும் வெளிப்படுகிறது. ராஜபக்சேகூட பரவாயில்லை எப்படியாவது மீதி நாலு பேருக்கும் தூக்குத் தண்டனை கொடுத்துவிடு என்று "இந்திய வழக்காடு மன்றத்தை" கேட்கிறார்கள்.

//5000 ஆண்டுகால இந்திய நாட்டின் பாரம்பரிய பெருமையை, உலகின் மூத்த குடிகளான தமிழர்களை குழி தோண்டி புதைத்த இந்த நயவஞ்சகர்களை தண்டிக்க வேண்டும். இவர்களை தண்டிப்பதன் மூலம் இந்தியா புத்தர் பிறந்த காந்தி பிறந்த தேசம் என்றுமே அற நெறி தவறாது என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்// என்று கூறி முடிக்கிறார்கள். நீங்கள் படித்தது ஆர்.எஸ்.எஸ். பிரசுரமா என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால் உங்களையும் தூக்கில் ஏற்றிவிடுவார்கள். ஜாக்கிரதை.

சரி ஏன் இந்த மறை கழன்றவர்களைப் பற்றி மூச்சுப் பிடித்துக்கொண்டு விமர்சிக்கிறீர்கள் என்று கேட்பீர்களென்றால் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான பதிலைச் சொல்கிறேன். இந்தப் பதிவு நான் பார்த்தவரையில் முகநூலில் 1,358 பேரால் ஷேர் செய்யப்பட்டிருந்தது.

Monday, February 25, 2013

டெசோ என்றால் எதிர்ப்பு; ஜெயா என்றால் ஆதரவு


கருணாநிதி: தனி ஈழம் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டவர். புலிகளையும், ஈழத்தையும் ஆதரித்ததால், அமைதிப்படையை எதிர்த்ததால், 1991-ல் இவர் தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது. 2009-ல் போர் நடந்த நேரத்தில் உறுதியான அரசியல் நிலை எடுக்கத் தவறியதுதான் இவர் மீதான குற்றச்சாட்டு.

ஜெயலலிதா: 2009 போர் நடந்த நேரத்தில் ஈழத் தமிழர் என்ற சொல்லே தவறு என்றும், இலங்கைத் தமிழர் என்றுதான் சொல்லவேண்டும் என்றும் குரல் எழுப்பியவர். போர் நடந்தால் சாவது சகஜம் என்றவர். விடுதலைப் புலிகளின் ஜென்ம வைரி. பிரபாகரனைக் கைது செய்யவேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானம் போட்டவர்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் இருவரும் தற்போது இருவேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

கருணாநிதி, "டெசோ" என்ற ஈழ ஆதரவாளர் அமைப்பை  ஏற்படுத்தி, ஈழ விடுதலை என்பதை கொள்கையாக அறிவித்து, அதற்கு ஆதரவாக இந்தியா முழுவதும் அரசியல் ஆதரவைத் திரட்டுகிறார். ஒரு இந்திய அரசியல் அமைப்பு என்ற முறையில் அதிகாரபூர்வமாக தமது நிலையை ஐ.நா.வில் தெரிவித்துள்ளார். தொடர் நடவடிக்கைகள், போராட்டத் திட்டங்கள் உண்டு.

ஜெயலலிதா இப்போதும்கூட, ஈழ விடுதலையை ஏற்பதாக பெயரளவில்கூட சொல்லவில்லை. உணர்ச்சி ஏற்றும், உசுப்பேற்றும் நடவடிக்கைகள் மூலம் மேம்போக்காக தாம், ஈழப் போராட்டத்துக்கு ஆதரவானவர் என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கிறார். உறுதியான அரசியல் திரட்டலோ, நடவடிக்கையோ ஏதுமில்லை. உலக அளவில் அரசியல் மக்களைப் பிரிக்கும்போதுகூட விளையாட்டும், பண்பாட்டுத் தொடர்புகளும் இணைக்கும் என்பார்கள். ஆனால், இலங்கை வீரர்கள் தமிழ்நாட்டில் வந்து விளையாடுவார்கள் என்பதால், ஆசிய விளையாட்டுப் போட்டியே தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது என்று முடிவெடுத்து, அதை வெளியே விரட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இவரது ஒரே "ஈழ ஆதரவு நடவடிக்கை" இதுதான்.

ஆனால், இன்று தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்கள் என்றும், தமிழத் தேசியர்கள் என்றும் அறியப்படுகிறவர்கள் கருணாநிதியின் "டெசோ" என்ற சொல்லைக் கேட்டாலே அறுத்துவிட்ட கோழியைப் போல குதிக்கிறார்கள். மொத்த இனப்படுகொலையையுமே செய்தவர் கருணாநிதிதான் என்று வசைபாடுகிறார்கள். கொதிக்கிறார்கள். ஆனால், இந்திய அளவில், எல்லா குறைபாடுகளுக்கும் மத்தியில் ஈழத்தை ஆதரிக்கும் ஒரே பெரிய அரசியல் கட்சி திமுக-தான் என்பதை மறைக்கிறார்கள்.

 பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விதம் வெளியாகியுள்ள நிலையில், இலங்கையோடு நட்பு பாராட்டும் மத்திய அரசின் செயலை கண்டித்தார் கருணாநிதி. அடுத்து டெசோ அமைப்பு மூலம் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு  வெளியிட்டார். இந்த இரண்டுக்காகவும், "தமிழத் தேசியர்களிடம்" இணையத்தில் கருணாநிதி வாங்கிய வசைச் சொற்கள் கொஞ்சமல்ல.

ஆனால், இதே வாரத்தில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் தடைவிதித்த ஜெயலலிதாவின் கடந்த காலத்தை வைத்து இந்த தமிழத் தேசியப் "போராளிகள்" விமர்சிக்க மறந்தது மட்டுமல்ல. தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இதுதான் இன்றைய தமிழத் தேசியர்களின் உண்மை முகம். தமிழ்த் தேசியம் என்னும் புலித்தோலுக்குள் ஒளிந்திருப்பது இந்து தேசியம் என்னும் பசு. எச்சரிக்கை தமிழர்களே.