Thursday, July 26, 2012

பார்வை: தேசியத் தேரும் இனவெறிக் குதிரைகளும்
இன்று தமிழக அரசியலில் தமிழ்த் தேசியம் விவாதப் பொருளாகி இருக்கிறது.

சாதிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தமது செல்வாக்கை பெருமளவில் இழந்துள்ள நிலையில் சாதி வெறிக் கட்சியாகி உள்ளது. அந்த வெறியை தமிழ்த் தேசியத்தின் வடிவமாகக் காட்ட முனைகிறது.

ஆவேசமான பேச்சுகள் மூலம் தமிழக அரசியல் களத்துக்கு அறிமுகமான சீமான், மத-மொழிச் சிறுபான்மையினரை எதிரிகளாகச் சித்திரித்து, இனத்தூய்மை பேசும் ஒருவித தமிழ்த் தேசியத்தை திராவிட இயக்கத்தின் எதிர்நிலையில் நிறுவ முயல்கிறார். மதச் சிறுபான்மையினர் எதிர்ப்பு, அதன் வழிப்பட்ட பாசிச வன்செயல்கள் பாஜக-வை இந்திய அரசியலில் முன்னிலைக்குக் கொண்டு சென்றன. அதன் வழி நின்று தமிழ்நாட்டில் மத-மொழிச் சிறுபான்மையினர் மீதான வெறுப்பை வளர்ப்பதற்கான கருத்தியல் அடிப்படையாக தமிழ்த்தேசியத்தை அவர் கையாள்கிறார். ஈழத்தில் இறுதிக் கட்டப் போரின்போது தலையிட்டு இழப்பை தடுக்க முடியாத திமுக மீதான பொது அதிருப்தி, இளைஞர்கள் மத்தியில் செயல்படுவதற்கான உணர்ச்சிபூர்வமான வாய்ப்பையும் இவருக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

இடைநிலைச் சாதிகளின் சாதி ஆதிக்கத்தையும், இந்துத்துவத்தையும் தடவிக் கொடுக்கிறது சீமானின் நாம் தமிழர் கட்சி. நீதிக் கட்சியை நிறுவிய மூவரில் ஒருவர் நடேசனார். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். எனவே, பிற்காலத்தில் முதலியார்களுக்காக சாதிக் கட்சி தொடங்கிய ஏ.சி.சண்முகம் அதற்கு "புதிய நீதிக் கட்சி" என்று பெயர் வைத்தார். சி.பா. ஆதித்தனார் என்ற நாடார் சமூகத்தைச் சேர்ந்த தலைவர் அந்தக் காலத்தில் நாம் தமிழர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். இப்போது நாடார் சமூகத்தைச் சேர்ந்தவரான சீமான் தமது அரசியல் கட்சிக்கு அதே பெயரை சூட்டியுள்ளார். இது தற்செயல் அல்ல.

இந் நிலையில், ஏற்கெனவே மிதமாக தமிழ்த் தேசியம் பேசிவந்த
தலித் அமைப்புகளை, தலித் இளைஞர்களை இந்த சாதிவெறிக் கும்பலின் செயல்பாடுகள் திகைத்துப் பின்வாங்க வைத்திருக்கின்றன.
பாமக, நாம் தமிழர் இதனினும் தீவிரமாகப் பேசும் சிறு குழுக்கள்
ஆகியோரை எதிர்கொள்ளும் போக்கில் தலித்தியர்கள், திராவிட இயக்கத்தார், மார்க்சியர்கள் போன்றோர் தமிழத் தேசியத்தை முற்று முழுதாக மறுதலிக்கத் தலைப்படுகிறார்கள்.

தமிழ்த் தேசியத்தை மட்டுமல்லாமல் தேசியம் என்னும் கருத்தியலையே எதிர்க்கும் நிலைக்கு இவர்கள் செல்கிறார்கள். இணைய வெளிகளிலும் பிற விவாதக் களங்களிலும் இந்த நிலை காணக் கிடைக்கிறது.

சாதிய, மதவழிப்பட்ட கலாசார தேசியமாக தமிழ்த் தேசியம் வரும்போது அதை எதிர்ப்பதில் தவறில்லை. ஆனால், அதன் போக்கில் தேசியமே பிற்போக்கானதுதான் என்று மொத்தமாகத் தீர்ப்பெழுதினால் அது அறிவியலுக்குப் புறம்பானதே.

தேசியம் முற்போக்கானதா, அல்லது பிற்போக்கானதா என்பதை ஒரு குறிப்பிட்ட சமூகம் எந்த வரலாற்றுக் கட்டத்தில் இருக்கிறது என்பதைக் கொண்டே சொல்ல முடியும். பொத்தாம்பொதுவாக தேசியம் முற்போக்கானது என்று ஏற்கவோ, பிற்போக்கானது என்று மறுக்கவோ முடியாது. சமூகங்களின் வளர்ச்சிப் போக்கில் தேசியம் என்பது ஒரு கட்டம். அந்தக் கட்டத்தை எட்டாத மக்களுக்கு அது முற்போக்கு, எட்டியபிறகு அதைத் தாண்டிச் செல்லவேண்டிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு அது பிற்போக்கு.

சிற்றரசுகளாக இருந்த ஐரோப்பாவில் தேசியங்களின் எழுச்சி சில நூற்றாண்டுகள் முன்பு நடந்தது. அவர்கள் அதில் முன்னேற்றத்தையே கண்டார்கள். இப்போது அவர்களின் சமூக, பொருளுற்பத்தி நிலைகள் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தேசியத்தைத் தாண்டிச் செல்லும் தேவையை அவர்களுக்கு உணர்த்துகின்றன. இப்போது ஐரோப்பியச் சமூகமாக மேலெழுந்து வருகிறார்கள். ஐரோப்பாவுக்கு ஒரே நாணயத்தைக்கூட கட்டமைத்துள்ளார்கள். சிற்றரசுகள் அழிந்து தேசிய அரசுகள் எழுச்சி அடைந்த ஐரோப்பிய உதாரணம், காலனியாதிக்கத்தால் கட்டுண்டுகிடந்த ஆசியச் சமூகங்களில் அப்படியே நிகழவில்லை.

ஆசிய சிற்றரசுகளை ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தி பிராந்தியங்களை ஒன்றாக கட்டுக் கட்டி ஆண்டார்கள். வெளியே போகும்போது அப்படியே விட்டுவிட்டுப் போனார்கள். மூன்று நூற்றாண்டுகள் அடிமைத் தளையில் கடந்த நிலையில், சுதந்திர சமூகங்களாக நம்மை எப்படிக் கட்டமைத்துக்கொள்வது என்பதில் நமக்குள்ள குழப்பம். சிற்றரசுக் காலத்துக்குத் திரும்பிச் செல்வதா, அதன் பிறகு நிகழ்ந்திருக்க வேண்டிய தேசிய அமைப்பை கைக்கொள்வதா அல்லது அதையும் தாண்டி, தேசிய ஒருங்கிணைப்பு அமைப்பை (தற்காலத்திய ஐரோப்பிய ஒன்றியம் போல அல்லது சோவியத் ஒன்றியம் போல) மேற்கொள்வதா என்பதே நமக்குள்ள கேள்வி.

இதில் நாம் எந்த இடத்திலும் இல்லை. மேலுமொரு காலனியாதிக்கத்தை ஒத்த அமைப்பை தேசியம் என்ற பெயரால் நம் மீது நாம் திணித்துக்கொண்டிருக்கிறோம். இந்தியா, இலங்கை போன்றதொரு பல் தேசிய அமைப்பு ஐரோப்பிய தேசிய ஒன்றியங்களைப் போல ஒருங்கிணைந்தும் பலம் பொருந்தியும் திழக முடியும்தான். ஆனால், இப்படி தேசிய ஒன்றியங்கள் உருவாக முக்கிய நிபந்தனை சுதந்திரமான தேசியங்கள்-தேசங்கள் இருக்கவேண்டும் என்பதே.

ஆனால், விறகுக் கட்டைப் போல மக்களை பலவந்தமாக ஒரு அமைப்புக்குள் திணித்து, மேலும் மேலும் மையப்படுத்தப்பட்ட அமைப்பால் ஆள முயற்சிப்பது கலவரங்களையும், தேசியங்களுக்கு இடையிலான பகை உணர்ச்சியையும் ஊட்டி மக்களை பின்தங்கிய நிலையிலேயே வைத்திருக்கும். ஐரோப்பிய, அமெரிக்க வல்லரசுகளும், உலகை வெல்லத் துடிக்கும் இந்தியப் பெருமுதலாளிகளும் விரும்புவதும் இதைத்தான்.

அதே நேரம் இன்னொன்றை கவனிக்கவேண்டும். உலகில் முகிழ்த்த தேசியங்கள் எல்லாம் ஒரு மொழியை அது பேசப்படும் ஒரு நிலப்பரப்பை மையமாகக் கொண்டு முகிழ்த்திருக்கலாம். ஆனால், எந்த தேசிய இனமும் ஒற்றை இனக்குழுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முகிழ்த்ததில்லை. வரலாற்று வழியில் இணைந்து வாழும் பல மரபினங்களின் சங்கமமாகவே தேசிய இனங்களும் பிறகு தேசங்களும் இருந்துள்ளன. இந்த அடிப்படையை மறுத்துவி்ட்டு, தமிழ்நாட்டுக்குள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்து பூர்விக நிலத்தின் தொடர்பை முற்றாக அறுத்துக்கொண்டு, மொழியை  பகுதியளவோ முழுதாகவோ மறந்து வாழ்ந்துவரும் தெலுங்கர்கள், கன்னடர்கள், உருது பேசும் முஸ்லீம்கள் போன்றவர்களையும் தமிழ்த் தேசியத்தின் அங்கங்களாகப் பார்க்காமல் பகைவர்களாகப் பார்க்கும் பார்வை, அந்த உத்தேசத் தமிழ்த் தேசியத்தின் கணிசமான மக்களை தேசியத்தின் எதிர் நிலையில் நிறுத்தி தேசியம் என்பதை இனவெறியாகக் குறுக்கும். முகிழ்க்கும் தமிழ்த் தேசியத்துக்குப் பகைவர்களைப் பெருக்கும்.

இனத்தூய்மையும், கலாசார தேசியமும் பேசும் இனவெறி, சாதி வெறிக் கும்பல்கள் வெளிப்பார்வைக்கு தேசிய விடுதலையை முன்னெடுப்பதைப் போலத் தோன்றினாலும் அவை உண்மையாகவே தேசியங்கள் எழுச்சி பெறுதலை பின்னோக்கி இழுக்கவே செய்கின்றன. ராமதாஸ், சீமான் போன்ற இத்தகைய நபர்களே இன்றைக்கு தமிழ்த் தேசியத்தை பிரதிநிதிப்படுத்துவதுதான் தமிழ்த் தேசியத்திற்கு நேர்ந்திருக்கிற கேடு.

1 comment:

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

Post a Comment