Friday, March 18, 2011

கூட்டணிக் குழப்பங்கள்: ஒன்னும் தெரியாத "பாப்பா..."

கூட்டணிக் கட்சியான மதிமுக-வுக்கு ஒதுக்கப்படும் தொகுதி எண்ணிக்கை குறித்து உடன்பாடு எட்டப்படவில்லை, தேமுதிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் உதிரிக் கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்பது குறித்து அந்தக் கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படவில்லை. திடுதிப்பென மதிமுக-வை அம்போவென விட்டுவிட்டு, அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகளின் பட்டியல், அதற்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை புதன்கிழமை இரவு அதிரடியாக அறிவித்தார் ஜெயலலிதா.

எவரையும் மதிக்காத ஜெயலலிதா-வின் திமிர்த்தனத்தை வீரம் என்று செம்மாந்து போகும் நடுத்தரவர்க அறிவு ஜீவிகள் மந்தகாசப் புன்னகை பூத்தார்கள். "பார்த்தீர்களா.... இதுதான் ஜெயலலிதா. எப்படி "போல்டாக" அறிவித்தார் பார்த்தீர்களா. கருணாநிதியால் இப்படி போல்டாக அறிவிக்கமுடியுமா" என்றெல்லாம் அவர்கள் தங்கள் கண்ணாடியை ஏற்றிவிட்டுக்கொண்டே பேசினார்கள்.
       அவர்கள் எதிர்பார்த்தது அப்படியே கூட்டணிக் கட்சிகளெல்லாம் திகைத்துப்போகும் என்பதுதான். நடந்ததோ தலைகீழ், ஜெயலலிதா அடித்த ஜின் மயக்கம் தெளியும் அளவுக்கு அந்த இதரக் கட்சிகள் பரபரப்பாக செயல்படத் தொடங்கின. அதிமுக தங்கள் கோபத்தை மதிக்காவிட்டால்  மூன்றாவது அணி அமையும் என்ற பரபரப்புப் பேச்சுகள் கசிந்தன. ஜெயலலிதாவின் விட்டேற்றியான, தான்தோன்றியான திமிர்ப் போக்கு மாறவே இல்லை என்பது நிரூபனமானது. சில ஊடகங்கள் தடவிய "மீட்பர்" ஒப்பனை கலைந்து ஜெயலலிதாவின் கடைவாய் பற்கள் துருத்திக்கொண்டு தெரிந்தன. கூட்டணிக் கட்சிகள் குறித்து கவலைப்படாத மக்கள்கூட அவரது நடவடிக்கை கண்டு முகம் சுளித்தார்கள்.
            
     வட இந்திய மீடியாக்களால் தமிழக நிலவரம் குறித்து கருத்து கேட்பதற்காக நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ள "அரசியல் விமர்சகர்" சோ-மாரியானவர்தான் ஜெயலலிதா-வுக்கு இந்தமுறை தேர்தல் ஆலோசகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதாவின் "போல்டான" நடவடிக்கைகளை ரசிக்கும் அறிவு ஜீவிகள் இந்த சோ-மாரியானவரின் அரசியல் ஞானம் குறித்தும் அவ்வப்போது "அடடா.... அடடா" என்று கூறி வியப்பார்கள்.
         ஒரே நேரத்தில் அனைத்து கூட்டணிகளையும் கடுப்படித்தால் என்ன நடக்கும் என்பதைக்கூட கற்பனை செய்யமுடியாத அளவுக்கு சோ-மாரியானவரின் அரசியல் ஞானம் ஆழமானது என்பதும் புலப்பட்டது.
     உடனே புறப்பட்டது ஜெயலலிதா-வின் பிரச்சாரப்படை. தினமணியில் அஜாதசத்ரு என்ற பெயரில் எழுதும் ஜனசத்ரு (மக்கள் எதிரி) எழுதிய கட்டுரையின் சாரம் இதுதான் : "பாப்பா....க்கு ஒன்னுமே தெரியாது. அவர் என்னமோ 60-70 இடத்துக்குதான் லிஸ்ட் போட்டு வைத்திருந்தார். லிஸ்டை வெளியே விடுங்கள் என்று சொன்னதும், சசிகலாவின் சித்தப்பா மாப்பிள்ளை ராவணன்-தான் அவரது சொந்தக்காரர்கள் கொடுத்த லிஸ்டை எல்லாம் சேர்த்து வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டார். எல்லாத்துக்கும் அந்த சசிகலா கும்பல்தான் காரணம். பாப்பா... ரொம்ப நல்லவர்" அவ்வளவே.

    சரிப்பா உங்கள் பாப்பா.... ரொம்ப நல்லவர். ஒன்னும் தெரியாதவர் என்றே வைத்துக்கொள்வோம். தமது பெயரில் வெளியாகும் தம் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் எந்தெந்த தொகுதிகள் உள்ளன, வேட்பாளர்கள் யார் என்பது கூடத் தெரியாத மயக்கத்தில் இருக்கும் ஒருவர் எப்படி இந்த மாநிலத்தின் முதல்வராக செயல்படமுடியும்?

    ஒன்னும் தெரியாத பாப்பா தாப்பா போட்டுக்கொண்டால், உடனடியாக கத்தி கூச்சல் போட்டு உதவி கோருவதுதானே வழக்கம்? அப்படி இல்லாமல் கூட்டணிக் கட்சிகளிடம் இவ்வளவு கோபமும் ஆவேசமும் எழுந்த பிறகாவது... அடடா இது நான் தயாரித்த லிஸ்ட் இல்லை என்று கூறி சமாளித்திருக்கலாமே. அப்படி செய்திருந்தாலாவது பாப்பா...க்கு ஒன்றும் தெரியாது என்று நாம் சமாதானம் அடைந்திருக்கலாம். இரண்டு நாள்கள் அரசியல் சூடு கிளப்பிக்கொண்டிருந்தபோதும் அவர் பேசாததற்கு என்ன காரணம், ஜின் மயக்கமா? அல்லது சோ-மாரிகள் ஊற்றிக்கொடுத்த வெற்றி மயக்கமா? இரண்டாவது மயக்கம் மார்ச் இரண்டாவது வாரத்தில் தெளிந்துவிடும். முதல் மயக்கம்.... கொஞ்சம் சிரமம்தான்.

மீண்டும் "சுமுக"ப் பேச்சுவார்த்தை

இதற்கெல்லாம் மத்தியிலும் மீண்டும் அதிமுக அணியில் கூட்டணிப் பேச்சுகள் சுமுகமாக நடப்பதாக பேட்டி கொடுக்கிறார்களாம் தோழர்கள்.

 தமிழகத்தில் இரு அணிகளிலும் நடந்துவரும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் எதனையும் கொள்கையோ புண்ணாக்கோ தீர்மானிக்கவில்லை என்பது வெளிப்படைதான். லாபம் கருதிப் புணரும் அரசியல் வேசைத்தனத்துக்கு எந்தக் கட்சியும் விதிவிலக்காகத் தெரியவில்லை.

எவ்விதமான லாபம் என்பதில் வேண்டுமானால் கட்சிகளிடையே வேறுபாடு இருக்கலாம். சிலருக்கு அதிகாரம், சிலருக்குப் பணம், வேறு சிலருக்கோ வெளி மாநிலங்களில் கட்சியின் நலன், சிலருக்கு சமூகத்தில் அவர்கள் சார்ந்த குழுக்களின் தந்திரோபாய நிலையை தக்கவைத்துக்கொள்வது என்று லாபங்களில் பலவிதம். ஒரு வேளை கம்யூனிஸ்ட் தோழர்கள் இந்தக் கருத்தை மறுதலிக்க வேகம் காட்டக்கூடும்.

ஆர்.எஸ்.எஸ். பாஜக வெறியர்களான சோ, தினமணி வைத்தியநாதன் போன்ற நபர்கள் அதிமுக-வின் அரசியல் தத்துவ ஆசான்களாக செயல்படுவது தெரிந்த பிறகும், ஜெயலலிதா-வை முதல்வராக்க தங்கள் முகத்தில் தெரித்த அவமானங்களைத் துடைத்துக்கொண்டு தோழர்களால் டி.வி. கேமராக்களில் சிரிக்கமுடியுமானால்,  அது கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையைக் காப்பாற்றுவதற்காகத்தான் என்று நம்புவதற்கு நாம் ஏமாளிகளல்ல. 

No comments:

Post a Comment