Tuesday, March 1, 2011

ஏப்ரல்-13ல் தேர்தல்: முடிவு தெரிய ஒரு மாதம் காத்திருக்கவேண்டும்


அப்பாடா. தேர்தல் தேதியை அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம். தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கும் புதுவை ஒன்றியப் பகுதிக்கும் ஏப்ரல் 13-ம் தேதி ஒரு கட்டத் தேர்தல். அசாமில் ஏப்ரல் 4, 11-ம் தேதிகளில் இரு கட்டத் தேர்தல். மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டும் ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி, மே-10-ம் தேதி வரை ஆறு கட்டத் தேர்தல்.


            தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மே முதல் வாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வெகு முன்பாகவே ஏப்ரல் இரண்டாம் வாரத்திலேயே நடக்கவுள்ளது. அது பரவாயில்லை. ஆனால், ஏப்ரல்-4, 11 தேதிகளில் வாக்களிக்கும் அசாம் வாக்காளர்களும், ஏப்ரல் 13-ம் தேதி வாக்களிக்கும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி வாக்காளர்களும் தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஒரு மாதத்துக்கு மேல் காத்திருக்கவேண்டும். ஆம். எல்லோருக்கும் சேர்த்து வாக்கு எண்ணிக்கை மே-13-ம் தேதிதான். ஏன் இந்தக் கொலை வெறி? தமிழக சட்டமன்றத்தின் ஆயுள் மே-16 வரை இருக்கும்போது, ஒரு மாதம் முன்பே தேர்தல் நடத்துவது தேவையா. அப்படியே நடத்தினாலும், மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிவதற்காக தமிழக வாக்காளர்கள் ஏன் காத்திருக்கவேண்டும்?


            ஏற்கெனவே, மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத் தன்மையை பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த சந்தேகத்தில் அடிப்படை இருக்கிறதோ இல்லையோ, வாக்களித்துவிட்டு ஒரு மாதம் காத்திருக்கும் வாக்காளருக்கு தாம் அளித்த வாக்குதான் உண்மையில் எண்ணப்படுகிறதா என்ற சந்தேகம் எழாதா? வாக்கு இயந்திரங்களை பாதுகாத்து வைத்திருக்கும் இடங்களில் முறைகேடு ஏதும் நடந்திருக்கும் என யாரும் சந்தேகிக்க இது இடமளித்துவிடாதா

       ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் மற்ற மாநில மக்களின் மனநிலையில் மாற்றத்தை கொடுத்துவிடக்கூடாது என்ற நோக்கமே இந்த முடிவுக்குப் பின்னணியில் இருக்குமானால், அது சரியா? அது சரியெனக் கொண்டாலும், தமிழகம் முதலிய மாநிலங்களில் ஏன் மேற்கு வங்காளத்தின் கடைசி கட்ட வாக்குப் பதிவுடன் சேர்த்து தேர்தல் நடத்தக்கூடாது?

            என் நண்பர் ஒருவர் நகைச்சுவையாக சொன்னார் தேர்தல் முடிவு வெளியாகும்போது யாருக்கு வாக்களித்தோம் என்பதே வாக்காளருக்கு மறந்துவிட்டிருக்கும் என்று!


1 comment:

Unknown said...

Chances are there to change the poll date in tamilnadu (because of school exams and also short duration) More over 1 month gap for announcing the result is too much.Tomorrow every political party is going to cry, to change the poll date to may month.
Gopinath,Arcot,Tamilnadu

Post a Comment