Wednesday, January 12, 2011

அதிமுக: வாசலில் கம்யூனிஸ்டுகள் புழக்கடையில் பாஜக


"ஆடு பகை குட்டி உறவு" என்பார்கள் ஊரில். அரசியலில் இதை "பாஜக பகை, அதிமுக உறவு" என்று மாற்றிச்சொல்லுகிறார்கள் கம்யூனிஸ்டுகள்.
பாஜக-காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணியை இந்திய அளவில் கட்டியெழுப்புவோம் என்று அறிவித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அதற்காக இரு அணிகளிலும் இல்லாத கட்சிகளை ஒன்று சேர்க்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் எதிர்ப்பில் வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக-வின் மதவாத ஆபத்தில் இருந்து நாட்டைக் காப்பதற்காக, ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தனர். ஊழலோடு ஒப்பிடுகையில் மதவாதமே அதிக ஆபத்தானது என்று வாதிட்டனர்.


ஆனால், அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மன்மோகன் அரசு முன்வந்தபோது, நாட்டின் இறையாண்மையே ஆபத்துக்குள்ளாகிறது என்று கூறி ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர். அன்றுமுதல் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் எதிராக முன்பைவிடத் தீவிரமாக அரசியலில் இயங்கி வருகிறார்கள் கம்யூனிஸ்டுகள். ஐமுகூ அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றபோது, "மீண்டும் எப்போதுமே காங்கிரசுக்கு ஆதரவு தரமாட்டீர்களா" என்று செய்தியாளர்கள் கேட்டபோது "அப்படிச் சொல்லமுடியாது என்றார்" சி.பி.எம். பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்.

மதவாத ஆபத்தில் இருந்து நாட்டைக் காக்கவேண்டிய தேவை வந்தால் மீண்டும் காங்கிரசுக்கு ஆதரவளிக்க நேரலாம் என்பதே அவர் சொல்லிய பதிலின் பொருள். பாஜக, காங்கிரஸ் இரண்டையும் எதிர்த்தாலும், அவர்களுடைய காங்கிரஸ் எதிர்ப்புக்கும், பாஜக எதிர்ப்புக்கும் இடையில் உள்ள நுட்பமான வேறுபாடு இங்குதான் இருக்கிறது. பாஜக-வை எதிர்ப்பதற்குதான் பரம்பரை எதிரியான காங்கிரசுக்கே ஆதரவளிக்கவேண்டிய தேவை கம்யூனிஸ்டுகளுக்கு வந்தது.
    கம்யூனிஸ்டுகள் ஆள்கிற அல்லது ஆளும் வாய்ப்புள்ள மாநிலங்களில் அவர்களுக்கு எதிரி காங்கிரஸ்தான். அவர்களோடு கைகோர்த்தாலும் கைகோர்ப்போம் ஆனால், பாஜக-வை வரவிடமாட்டோம் என்று கூறும் அளவுக்கு இந்துத்துவ அரசியலின் ஆபத்தை கம்யூனிஸ்டுகள் தீவிரமாகப் பார்க்கிறார்கள்.

   இந்தியா என்ற அமைப்பை, அதன் மதச்சார்பற்ற, ஜனநாயக அரசியலை மதவாத அரசியல் சிதைத்துவிடும், உண்மையான பகைவர்களை மறைத்து மக்களையே ஒருவருக்கு ஒருவர் பகைவர்களாக நிறுத்திவிடும், சமூகத்தை மிகப் பிற்போக்கான நிலைக்குத் தள்ளிவிடும், ராமர் கோயில், ராமர் பாலம் என்ற எளிய கதைகளைச் சொல்லி நாட்டை ரத்தக் களரியாக்கிவிடும் என்பதுதானே அவர்களது அச்சம். அதனால்தானே காங்கிரசுடனான உடனடி அதிகாரப் போட்டியைவிட பாஜக-வுடனான தங்கள் கருத்தியல் யுத்தமே முக்கியமானது என்று கருதி அரசியலை நகர்த்துகிறார்கள்.

ஆனால் பாஜக-வின் கொள்கைகளையே பின்பற்றும் வேறொரு கடசியுடன் கூட்டணி வைப்பீர்களா என்று ஏதாவது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரிடம் கேட்டுப் பாருங்கள்... அவர் உடனடியாக மறுப்பார். ஆனால், தமிழ்நாட்டில் அதுதானே நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளின் பாரம்பரிய கூட்டணியான திமுக காங்கிரசுடன் ஐக்கியமாகிவிட்ட நிலையில், திமுக-அதிமுக அல்லாத ஒரு கூட்டணியையோ, அல்லது அரசியல் மாற்றையோ உருவாக்கியிருக்கவேண்டிய கம்யூனிஸ்டுகள் அதிமுக-வுடன் கூட்டணி என்று கூச்சமில்லாமல் அறிவித்து "தோழர்" ஜெயலலிதாவுடன் கைகோர்த்துவிட்டனரே.

தேசிய அளவில் காங்கிரசுடன் பகைத்துக்கொண்டு பாஜக-வுடன் கூட்டணி அமைப்பதற்கு சமம்தானே இது.

ஜெ. எந்தவகையில் பாஜக இல்லை?
   ராமர் கோயில், ராமர் பாலம் போன்ற பொய் வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால அரசியலில் வன்முறையைத் திணிக்கும் பாஜக அரசியலில் கிஞ்சித்தும் மாறுபாடு இல்லாதவர் ஜெயலலிதா என்பது மெத்த படித்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்குத் தெரியாதா?

ஜெயலலிதா-வும் ராமர் கோயிலுக்கு ஆதரவு தெரிவித்தவர், ராமர் பாலத்தை காரணம் காட்டி சேதுக்கால்வாய் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர், மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவந்தவர், ஹிட்லரின் இந்திய வடிவமான மோடிக்கு வாழ்த்து சொல்ல குஜராத் வரை சென்றவர், பாஜக-வாவது நாங்கள் முஸ்லீம்களுக்கு எதிரியல்ல என்று பெயரளவுக்கு சொல்வதற்காகவாவது, தங்கள் அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் அமைச்சரை வைத்திருந்தார்கள். ஒரு முஸ்லீமை குடியரசுத் தலைவர் ஆக்கினார்கள். "தலித்" பங்காரு லட்சுமணனை கட்சித் தலைவர் ஆக்கினார்கள்.

   இது போன்ற பெயரளவிலான பம்மாத்துகளைக்கூட செய்யமுடியாத அளவுக்கு தீவிர இந்துத்துவவாதியான ஜெயலலிதா தனது அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லீமைக் கூட அமைச்சராக்கவில்லை. "தலித்" சமூகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் அருணாசலத்தை தமது விமானத்தில் இருந்து கீழே இறக்கினார். தென் மாவட்டத்தில் தலித்துகளுக்கு எதிரான தேவர் அரசியலுக்கு தூபம் போட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக 2 லட்சம் அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் டிஸ்மிஸ் செய்யும் அளவுக்கு, நள்ளிரவில் கைது செய்யும் அளவுக்கு,  போராடிய போக்குவரத்துத் தொழிலாளர்களை இரக்கமற்று நசுக்கும் அளவுக்கு,  அரசு வேலைக்கு ஆளெடுப்பதையே தடை செய்யும் அளவுக்கு, வேலைக்கு எடுக்க நேர்ந்தபோது அவர்களுக்கு 3 ஆயிரமும் 4 ஆயிரமும் அத்துக்கூலி கொடுக்கும் அளவுக்கு, பத்தாயிரக் கணக்கில் சாலைத் தொழிலாளர்களை, மக்கள் நலப் பணியாளர்களை வேலை நீக்கும் அளவுக்கு, அவர் தொழிலாளர் வர்க்க விரோதியாக ஆட்சியில் இருக்கும்போது செயல்பட்டார். 10-ம் வகுப்பு தேறிய பெண்களுக்குத் திருமண நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட பல சமூக நலத்திட்டங்களை நிறுத்தி, "அரசை சுருக்கு (டவுன் சைஸ் த கவர்ன்மென்ட்)" என்ற அமெரிக்க பொருளாதாரக் கொள்கையை ஏற்று கைக்கூலி அரசை நடத்தினார். இந்த ஆட்சியைத்தான் மீண்டும் கட்டமைக்க துணை போகிறதா கம்யூனிஸ்ட் கட்சி?

அதிமுக - தமிழகத்தின் பாஜக

அவரது மதவெறி பாஜகவுக்கு சற்றும் குறைந்ததல்ல. அவரது சாதியம் பாஜக-வுக்கு சற்றும் குறைந்ததல்ல. அவரது தொழிலாளர் விரோதப் போக்குக்கு இணையாக சொல்லும் அளவுக்கு பாஜக, காங்கிரஸ் மட்டுமல்ல எந்தக் கட்சியுமே இந்தியாவில் இல்லை. மக்களுக்கு "கசப்பு மருந்து" கொடுப்பதில் அவர் பாஜகவுக்கு, காங்கிரசுக்கு எல்லாம் பெரிய அக்கா.
அவர் எந்த வகையில் தனது இயல்பில், அரசியலில் ஒரு பாஜக-வாக ஆர்.எஸ்.எஸ். ஆக இல்லை என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொல்லமுடியுமா?

அகில இந்திய அளவில் பாஜக அல்லாத-காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் கூட்டணி என்று துணிச்சலான நிலைப்பாட்டை எடுத்துள்ள கம்யூனிஸ்டுகள், தமிழ்நாட்டில் எந்த அளவிலும் பாஜக-வுக்கு குறைச்சலில்லாத மதவாதியான, வலது பிற்போக்குவாதியான ஜெயலலிதாவுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்கள். பாஜக-வை எதிர்ப்பதற்காக ஜென்ம விரோதியான காங்கிரசுடன் கூட்டணி வைத்தவர்கள் எப்படி, திமுக-வை எதிர்ப்பதற்காக தமிழகத்தின் "பாஜக"வான அதிமுக-வுடன் கூட்டணி வைத்துள்ளார்கள்.

பாஜக-அதிமுக உத்திக்கு கம்யூனிஸ்டுகள் பலியாவதா?

வாக்கு வங்கியே இல்லாத பாஜக அதிமுக-வுடன் கூட்டணி அமைப்பதால் அதிமுக-வுக்கும் லாபமில்லை, பாஜக-வுக்கும் லாபமில்லை. அதைவிட தங்கள் ஜென்ம விரோதிகளான கம்யூனிஸ்டுகளின் ஆதரவுடன் அதிமுக-வை வெற்றிபெற வைத்துவிட்டால் தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா-வின் பலம் தங்களுக்குதான் சாதகம் என்பதுதானே பாஜக-வின் கணக்கு.
இந்த புரிதலோடுதானே ஒத்த கருத்துடைய பாஜகவும் அதிமுக-வும் பிரிந்து கிடக்கின்றன. நாடாளுமன்றத்தில் அதிமுக-வின் 9 எம்.பி.க்கள் ஆட்சியைத் தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெறும் நிலை ஏற்பட்டால் அதிமுக பாஜகவுக்கு வாக்களிக்குமா மதச்சார்பற்ற அரசை ஏற்படுத்தும் கம்யூனிஸ்டுகளின் முயற்சிக்கு ஆதரவளிக்குமா?
இந்தக் கேள்விகளுக்கு எங்களுக்கு விடை தெரியாது என்று கம்யூனிஸ்டுகள் சொன்னால் அது நடிப்பாகவே இருக்கும்.
ஜெயலலிதா-வின் அரசியல் நம்பகத்தன்மை நாடறிந்தது. ஈழத் தமிழர் என்று யாருமில்லை இலங்கைத் தமிழர்தான், பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்கவேண்டும் என்று பேசிவந்த ஜெயலலிதா, தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு திடீரென தனி ஈழம் அமைப்போம் என்றார். அதே பாணியில் ஆ.ராசா-வை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் காங்கிரசுக்கு ஆதரவு என்றார். மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கினோமே என்று கம்யூனிஸ்டுகள் பதைபதைத்தனர். தன் சூழ்ச்சி பலிக்காமல் போன அடுத்த நொடி... "சும்மாச்சுக்கு" சொன்னேன் என்றார். அப்போதைக்கு கம்யூனிஸ்டுகளின் நெருக்கடி தீர்ந்தாலும் இத்தகைய நம்பகத்தன்மையுடைய "தோழி" ஒருவர் தேர்தலுக்குப் பிறகு எப்படி நடந்துகொள்வார் என்பது கம்யூனிஸ்டுகளுக்குத் தெரியாதா?
ஜெ. மீது வழக்கு, விமர்சனம் என்று பட்டையை கிளப்பினாலும் சோ, சுப்ரமணிய சாமி போன்ற இந்துத்துவ, பாஜக அனுதாபிகளுடன் ஜெ.வின் அந்தரங்க உறவு தொடர்வதும் கம்யூனிஸ்டுகளுக்குத் தெரியாதா?

தேர்தல் நேரத்தில் கம்யூனிஸ்ட் சார்பு தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒரு ஆசிரியரிடத்தில் என் நண்பர் கேட்டார் "நீங்கள் கம்யூனிஸ்ட்தானே?" என்று. அந்த ஆசிரியர் உடனடியாக பதில் சொன்னார், "ஆம் நான் கம்யூனிஸ்ட்தான் ஆனால், அதிமுக-வுக்கு வாக்களிக்கமாட்டேன்" என்று. தங்கள் தொழிற்சங்க அணிகளின் அரசியல் விருப்பார்வங்களுக்குக்கூட எதிராக அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சாதிக்கப்போவது என்ன? இந்து ராஜ்ஜியமா?

கம்யூனிஸ்டுகளே.....

தன் புழக்கடை வழியே பாஜக-வுடன் உறவும் கொள்கை உடன்பாடும் கொண்டுள்ள ஜெயாவின் வாசல் வழியே நீங்கள் உறவு கொண்டுள்ளீர்கள்ஜெ. அணியில் நிற்பதன் மூலம் பாஜக எதிர்ப்பு என்னும் உங்கள் நிலைப்பாடு பொய்த்துப் போகவில்லையா? நீங்கள் அதிமுக-வங்கியில் அரசியல் ஆதரவை டெபாசிட் செய்கிறீர்கள். பாஜக-அதனை வித்ட்ரா செய்யக்காத்திருக்கிறது. இந்தக் குரல் உங்கள் காதுகளை எட்டாவிட்டால் வரலாறு உங்களை மன்னிக்காது.   


  

2 comments:

முகமூடி said...

வரலாறு என்றுமே யாரையும் மன்னிப்பதும் இல்லை மறப்பதும் இல்லை. மதவாதம் என்பது வீட்டிற்க்கு உள்ளே பாம்பு தானாக வரக்கூடாது என்று நினைப்பதற்க்கு ஒப்பானது. ஊழல் என்பது பாம்பாட்டி பாம்புடன் வரகூடாது என்று நினைப்பதற்க்கு ஒப்பானது. சும்மா கம்யூனிஸ்ட்களை திட்டாதீர்கள் அவர்களும் இல்லையென்றால் இந்நேரம் மிச்சம் இருப்பதையும் இவர்கள் தின்று இருப்பார்கள்.

Sagoki said...

பா.ஜ.க வை விட பயங்கரமானவர் ஜெயலலிதா....அதிகாரத்திமிரின் உச்சம்.

Post a Comment